Categories
உலக செய்திகள்

கேள்விக்குறியான பெண்களின் எதிர்காலம்…. ஆப்கான் மாணவியின் வேதனை…. வெளியான காணொளி காட்சி….!!

ஆப்கனிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளியில் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கல்வியில் உயர்ந்து சாதனை படைக்க விரும்பும் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 22 வயதான ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளி ஒன்றில் பேசியுள்ளார். அதில் “தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய முதல் நாள் அன்றே என் வீட்டு வாசலில் கதறலும் துப்பாக்கி சத்தமும் கேட்டது. அதனை நான் என் கண் முன்பாகவே கண்டேன். சில திருடர்கள் தங்களை தலீபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு மக்களின் பொருள்களையும், கார்களையும் திருடினர். மேலும் தலீபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்று கல்லூரி ஆசிரியர்கள் எங்களிடம் குட்பை என்று கூறினார்கள்.

ஒரு வேளை பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடாது என்பதனை தலீபான்கள் எண்ணியதை தான் அவர்கள் அப்படி கூறினார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதிலும் பெண்களை மதித்து அவர்களுக்கான உரிமையும், மரியாதையும் வழங்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இங்கு நடப்பதை பார்த்தால் வேறுவிதமாக உள்ளது. என்னால் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியுமா என்ற எண்ணம் எழுந்துள்ளது. தற்பொழுது தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முழு சக்தியுடன் உள்ளனர். இதனால் நாட்டில் உள்ள இளம் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உலகம் எங்களை தனித்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |