இந்தியாவிலிருந்து ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க கோரி தலீபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கியதும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காபூலில் இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறினர்.
அதன்பின் ஆப்கானில் குறைந்த அளவிலான விமானங்களே செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பின் ஆப்கானுக்கு செல்லும் அனைத்து வர்த்தக விமானங்களையும் நிறுத்தியது. தற்போது ஆப்கானின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு மீண்டும் விமான சேவையை தொடங்குமாறு தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துக்கு (DGCA) கடிதம் மூலம் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்த கடிதம் குறித்து பரிசீலனை செய்து வருவதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டுள்ளது.