ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி இந்தியாவிற்கு வரும் 27ஆம் தேதி வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதைத் தொடர்ந்து அங்கு தாலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாலீபான்கள் தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியான ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் இந்தியாவில் 27 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய ராணுவ தளபதியான நரவனே மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டவர்களை ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி சந்திக்க உள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வரும் இத்தகைய சூழலில் அந்நாட்டின் ராணுவத் தளபதி மேற்கொள்ள இருக்கும் இந்த சுற்றுப்பயணமானது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.