பல வருடங்களுக்கு பிறகு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது
நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா போன்றே இதுவரை இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. “ஆப்பிரிக்கன் ஸ்வைன் ப்ளூ” என கூறப்படும் இந்த காய்ச்சல் சீனாவிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வழியாக பரவி இருக்கலாம் என அசாம் மாநிலத்தின் அரசு சந்தேகிக்கிறது. இது கொரோனாவை விட இது மிகவும் ஆபத்தான நோய். காரணம் இந்த நோயின் இறப்பு விகிதம் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.
மனிதர்களை இந்த நோய் தாக்கும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிக அளவு இந்த நோய் பன்றிகளை மட்டுமே தாக்கி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து நீர் நிலைகளின் மூலம் பன்றிகளின் உயிரிழந்த சடலங்கள் அசாம் மாநிலத்திற்கு வந்தன. இதனிடையே அருணாச்சல பிரதேச அரசு பன்றி இறைச்சியை மக்கள் சாப்பிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதுவரை இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் 17,277 பன்றிகள் அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் அத்துல் போரா கூறுகையில், இதுவரை மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களில் இந்த நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் உள்ள சீன மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குள் இந்த நோய் வந்து இருக்கலாம் என அதிக அளவு சந்தேகம் உள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க ஒரே வழி பன்றி இறைச்சியையும் பன்றியையும் விற்க மாநிலத்தில் தடை விதிப்பது மட்டும்தான். தற்போது அசாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் வெள்ள பாதிப்பு இல்லாத இடத்தில் மட்டுமே இந்த தடையை அமல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்