துணை முதல்வருடன் ஆலோசனை நடந்து முடிந்த நிலையில், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்..
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது.. இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் இல்லம் அருகே குவிந்துள்ள அவரது ஆதரவாளர்கள் ‘ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷமிட்டனர்..
இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.. அதனைத்தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமி உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வருடன் ஆலோசனை நடந்து முடிந்த நிலையில், முதல்வருடன் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. இந்த ஆலோசனைக்குப் பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.