தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் 45 நாட்கள் கழித்து ஏலக்காய் ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் உள்ளே ஏலக்காய் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலம் நேற்று முன் தினம் காலையிலும், மாலையிலும் என இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், பட்டிவீரன்பட்டி, உத்தமபாளையம், விருதுநகர், கேரளா, மூணாறு சாந்தம்பாறை, வண்டன்மேடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து இ-மெயில் மூலம் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலக்காயை கொள்முதல் செய்துள்ளனர். அந்த வகையில் முதல் தர ஏலக்காய் ஒரு கிலோ 1,747க்கும், நடுத்தர ஏலக்காய் ஒரு கிலோ 1,103 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமாக 79,703 கிலோ ஏலக்காய் விற்பனையாகியுள்ளது. மேலும் பல நாட்களுக்கு பின்பு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.