நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை.
இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று வரை 9,227 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது. கோவையில் மொத்தம் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேரும் குணமடைந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.
அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் இன்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை முதல் கோவை காய்கறி சந்தை மிகவும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடனும் காணப்படுகிறது. இதனால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.