விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்ற கருப்பினத்தை சேர்ந்த வாலிபரை காவலர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தியதால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நிறவெறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற தொடங்கியது. இன்னிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் வெண்டி என்ற உணவகத்தின் வெளியே நேற்று முன்தினம் கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் படுத்து இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அப்பகுதிக்கு வந்தவர்கள் வாலிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்து விட்டு காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வாலிபர் ப்ருக்ஸ் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பரவ மீண்டும் நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது .
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்த வெண்டி உணவகத்தை தீ வைத்துக் கொளுத்தினர். இதையடுத்து 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட வாலிபரின் இளைய மகளுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.