சிவகளை அகழாய்வு பணியில் முதல்முறையாக தங்க பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளையில் மாநில அரசு சார்பில் கடந்த 2 வருடமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கடந்த மார்ச் மாத இறுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்நிலையில் சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை பகுதிகளில் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை கண்டறியவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் ஸ்ரீமூலக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பராக்கிரமபாண்டிதிரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், காதணிகள், ஆட்டக்காய்கள், வளையல் துண்டுகள், புகைப்பான் பாசிமணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனை கருவிகள், முத்திரைகள் உள்ளிட்ட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சங்க காலத்தை சேர்ந்த 25 சென்டி மீட்டர் நீளமும், 16 அடி சென்டி மீட்டர் அகலமும், 5 சென்டிமீட்டர் உயரமும் உள்ள சங்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுப்பணியில் தங்கத்தாலான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சிறு சிறு மெல்லிய கோடுகள் உள்ளது. இந்நிலையில் சிவகளையில் நடைபெற்ற அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கபொருள் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.