Categories
தேனி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ கிணற்றில் இருந்து கேட்ட அழுகுரல்… கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 150 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தான்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் பாண்டி (4). இவர்கள் இருவரும் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீட்டிற்கு வரவில்லை, இதனால் பதறிப்போன சிறுவனின்  பெற்றோர், உறவினர்கள் சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  வடபுதுப்பட்டி கிராமத்துக்கு  விரைந்து வந்த காவல் துறையினர், லோகேசுடன் சேர்ந்து விளையாடிய சிறுவன் பாண்டியிடம் விசாரணை நடத்தினர்.  பாண்டியை  உடன் அழைத்துக்கொண்டு லோகேஷை தேடத் தொடங்கினர்.

அப்போது, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தெருவிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள 150 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றிலிருந்து சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே காவல்துறையினர்  கிணற்றில் பார்த்த போது  சிறுவன் கிணற்றில் விழுந்து படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அறிந்தனர்.

அதையடுத்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தேனி தீயணைப்புப் படை வீரர்கள்  குழு, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டனர். அதன்பின் சிறுவன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்; ஆனால் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்  பயன்பாடில்லாத கிணறுகளைத் தடுப்புக் கம்பிகள் மூலம் அடைக்க வேண்டும் எனக் அப்பகுதி மக்கள், கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Categories

Tech |