‘மூடர்கூடம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வரும் இவர், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.
இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இரு முன்னணி நடிகர்களை வைத்து நவீன் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சீனு என்ற காபாத்திரத்திலும், அக்ஷரா விஜி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷராவின் போஸ்டர்கள் தனித்தனியே சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அருண்விஜய்யின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்து ‘அக்னி சிறகுகள்’ படத்தின் இயக்குநர் நவீன் கூறுகையில், அருண் விஜய் மற்றும் விஜய் ஆன்டனி இருவருமே ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் வன்முறை காட்சிகள் நிறைந்தது.படம் குறித்து கதையையோ காட்சி அமைப்புகளையோ சொல்லக்கூடாது என்று ஒட்டு மொத்த படக்குழுவுக்குமே வாய்பூட்டு போட்டிருக்கிறேன். காரணம் ஒரு முழு நீளப் படம் முழுவதிலும் ரசிகர்களுக்கு ஆச்சரியங்களைத் தரவேண்டும் என்ற ஆசைதான்.
ஆனால் ஒன்றை மட்டும் இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ‘அக்னி சிறகுகள்’ ஆக்ஷன், உணர்வுபூர்வக் காட்சிகள், சாகசங்கள், சஸ்பென்ஸ் என்று அனைத்தும் நிரம்பிய பொழுதுபோக்கு படம். ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராடில் புகழ் பெற்ற போர்ஸ் சுப்ரீமஸியைச் சேர்ந்த விக்டர் ஐவானோவ் என்ற கலைஞர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தார். சிறப்பான சண்டைக் காட்சிகளுக்காகவே வழங்கப்படும் டாரஸ் வோர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட் விருதை இரண்டுமுறை இவர் வென்றவர்.
இதுதவிர கஜகிஸ்தானில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளை மற்றொரு உலகப் புகழ் பெற்ற ஜெய்டாக் என்பவரின் தலைமையிலான நோமட்ஸ் ஸ்டண்ட் டீம் வடிவமைத்துள்ளது. சண்டைக் காட்சிகளில் அருண் விஜய் மிருகத்தைப்போல் சண்டையிட்டுள்ளார்.
படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் கஜகிஸ்தான் செல்ல உள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஐரோப்பாவுக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கிறது. ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் மாற்றப்பட்டிருப்பதால், முன்னர் ஷாலினி பாண்டே நடித்த காட்சிகள் மீண்டும் அக்ஷரா ஹாசன் நடிக்க, படமாக்கப்படவிருக்கிறது.
அக்ஷரா இந்தப் படத்தில் யாருக்கும் ஜோடியாக நடிக்கவில்லை. அருண் விஜய் மற்றும் விஜய் ஆன்டனிக்கு இணையான பாத்திரத்தல் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.