உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இது குறித்து பரசுராம் கூறியதாவது, என்னுடைய மகளுக்கு நான் சொகுசு கார் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதற்கு பதிலாக ஏதாவது பயனுள்ள ஒரு பொருளை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய மகள் தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், ஒருவேளை அந்த தேர்வில் தோல்வியுற்றால் இந்த புல்டோசர் அவளுக்கு உதவியாக இருக்கும். அவளுடைய வாழ்வாதாரத்திற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கும் நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவர்களுடைய வீடுகளை புல்டோசர் மூலம் அரசாங்கம் இடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.