சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் பேசிய துணை முதல்வர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம்” என பேசினார். அதை தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்திருக்கிறது. பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது.
இன்றைக்கு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம். எல்லா துறைகளிலும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி தொடரும். அதிக இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று கழக ஆட்சி அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.