நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். முதல்வர் பழனிசாமி அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்றும், பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அதிமுக கட்சி தலைமையகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், நாளை காலை நாங்குநேரி விக்கிரவாண்டி காமராஜர் நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதன்படி இன்று விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கானை ஒன்றிய செயலாளராக முத்தமிழ்ச் செல்வன் இருந்துள்ளார். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்துள்ளார்.