சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் கிட்டதட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது திமுக மற்றும் அதிமுகவில் தலா ஐந்து உறுப்பினர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதேபோல் சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் உதவியுடன் ஒன்றிய குழு தலைவர் பதவியை தங்கள் வசம் கொண்டு வந்தது.
அதன்படி சுயேச்சை கவுன்சிலர் விஜேந்திரன் துணை தலைவர் பதவியிலும், பிரியா பாலமுருகன் ஒன்றிய குழு தலைவர் பதவியிலும் இருந்து வந்தனர். அதன் பிறகு சுயேச்சை கவுன்சிலர் விஜேந்திரன் கடந்த மாதம் திடீரென திமுகவில் இணைந்தார். இதனால் கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் பிரியாவின் கணவர் பாலமுருகன் ஆத்திரத்தில் விஜேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து அடுத்த அதிரடியாக அதிமுக ஒன்றிய குழு தலைவர் பிரியா பாலமுருகன், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அதிமுக இடையை பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக கட்சிக்கு தாவியுள்ளனர்.
இதனால் அதிமுக ( ஒன்றியக்குழு தலைவர் ) செல்வாக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியல் விமர்சகர்கள் பலரும் சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளை கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருவதால் தற்போது இந்த ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.