அதிமுக பெயரில் இணையப்பக்கம் நடத்தி, அதில் அக்கட்சி சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும்; இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கடந்த ஜனவரி 25ஆம் தேதி சூலூர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் பிணை கேட்டு, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் கே.சி. பழனிசாமி தரப்பு, புகார் அளித்த அதிமுக பிரமுகர் கந்தவேல் தரப்பு, அரசுதரப்பு வழக்கறிஞர்கள் என மூன்று தரப்பினரும் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து மனுவின் மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை பிணை வழங்கி, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.