அண்மையில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து கூறிய அவர், இன்று காலை முதல் எல்லோரும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாற்று இயக்கத்துக்கு செல்ல போவது உண்மையா என கேட்கிறார்கள். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஏற்கனவே தெளிவா சொல்லி விட்டேன்.
நான் இன்னைக்கு திமுகவிலிருந்து இன்னொரு கட்சியில் போய் சேர அளவுக்கு எந்த கட்சிக்கும் தகுதி இல்லை.பாஜகவுக்கு அல்லது அண்ணா திமுகவுக்கோ எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. நான் பொதுவெளியில பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பணியை அரசியல் கட்சி சார்பற்று செயல்படுகின்ற அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து நான் செயல்பட விரும்புகின்றேன்.
குறிப்பாக விவசாயிகளுடைய முன்னேற்றத்திற்காகவும், பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட போகின்றேன். எந்த அரசியல் கட்சியிலும் சேருகின்ற நோக்கம் எனக்கு இனியும் இமியளவும் கிடையாது. நான் இணைகின்ற அளவுக்கு அதிமுக கட்சிக்கு தகுதி இல்லை. பாரதிய ஜனதா கட்சி மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
அந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றால் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவெளியில இயங்கினால் தான் என்னால் சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். இதே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டு நான் பாஜகவை விமர்சனம் செய்தால் மத்தியிலே ஆளுங்கட்சியாக இருக்கின்ற பாஜக கட்சிக்கும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
எனவேதான் நான் இந்த இயக்கத்தில் இருந்து நான் விலகி இருக்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேருகின்ற எண்ணம் இம்மியளவும் எனக்கு கிடையாது. என்னை பிடிக்காதவர்கள் தவறாக, என்னுடைய பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த இப்படி செய்கிறார்கள் என விளக்கம் அளித்தார்.