கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக அவர் அறிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன பாரதிய ஜனதாவுடன் நீண்டகாலம் தோழமை பாராட்டும் சிவசேனாவும் மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையான இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காத நிலையிலும் அதிமுக மசோதாவை ஆதரித்து இருப்பது சர்ச்சையாகி உள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுகவின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.