ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளை தவிர்த்து பிற வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டனர். மேலும், கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், நுழைவுத்தேர்வுகள் மற்றும் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பல்கலை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, அண்ணா பல்கலை தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் ஜூன் மாதத்தில் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வினை எப்போது நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.