மு.க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்து செல்வது மக்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. கொரோனா மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும், சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு இறப்பு விகிதத்தை குறைத்து கணக்கிட்டு சொல்கிறது என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்த வந்தன. இதையடுத்து தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டார். புதிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விமர்சனங்களையும், கேள்வியையும் எழுப்பியது.
இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம் செய்ததை போல சுகாதாரத் துறை அமைச்சரையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்த கேள்விக்கு, மு க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று பதிலளித்த அமைச்சர் காமராஜ் , கல்லணை திறந்த ஓரிரு நாட்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரும் என்று தெரிவித்தார்.