பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் சங்கம் மத்திய விமானத் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடித்தத்தில், “2020 மார்ச் 31ஆம் தேதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் இருந்தால், அந்நிறுவனம் மூடப்படும் என ஒரு அறிக்கையில் நீங்கள் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.
கடந்த 2-3 வருடங்களாக இவ்விவகாரத்தில் நிலைவிவரும் நிலையின்மையின் காரணமாக, பல ஊழியர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திரும்பி செலுத்தமுடியாமலும், சரிவர செவழிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். முன்னதாக, 21 தனியார் விமான நிறுவனங்கள் மூடப்பட்டபோது அதன் ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டு நிர்கதியாக்கப்பட்டனர். வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் இந்தச் சூழலில் அவர்களைப் போன்ற நிலைமையை நாங்கள் சந்திக்க விரும்பவில்லை.
எனவே, நாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை தடுக்க எங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை உடனடியாக வழங்கி, நோட்டீஸ் பீரியட் இன்றி ராஜினாமா செய்ய வழிவகை செய்யவேண்டும்” என காட்டமாக தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா விமான ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடித்தை சமர்பித்த பிறகு, 6 மாதங்கள் நோட்டீஸ் பீரியட்டில் அந்நிறுவனத்தில் பணிபுரிய வேண்டியது அவசியம்.