மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சீனாவை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிற்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதையடுத்து இந்த விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விமான சேவையை தொடர்வதற்காக குறிப்பிட்ட 18 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி ஹாங்காங்குக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்கியது. இந்த நிலையில் மும்பையில் இருந்து சமீபத்தில் இயக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து நவம்பர் பத்தாம் தேதி வரை இந்த மார்க்கத்தில் விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.