காற்று மாசு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று பெங்களூர் சுற்றுச்சூழல் அறிவியல் துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது என்ற எச்சரிக்கையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், காற்றின் சுத்தம் அதிகரித்துவருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ஓரிரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது காற்று மாசு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று பெங்களூர் பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதில், காற்றில் பரவும் திட மற்றும் திரவ மாசு தற்போது அதிகரித்து வருவதாகவும், இது கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள சிறிய மைக்ரான் கழிவுகள் சுவாசத்தின் மூலம் நேரடியாக நுரையீரலைச் சென்றடையும். இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட அதிக பாதிப்பை இந்த திட மற்றும் திரவ கழிவுகள் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.