நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கு மாற விரும்பும் பயனர்களை ஏமாற்றும் வகையில் போலி அழைப்புகள் வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல அழைத்து. 4ஜியில் இருந்து 5ஜி சேவைக்கு மாற உதவுவதாக கூறி, சிம்கார்ட், வங்கி உள்ளிட்ட விவரங்களை பயனர்களிடம் பெற்று பண மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் 5ஜி சேவைக்கு மாற விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.