தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் காவல் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனை அடுத்து ஈரோட்டில் இருக்கும் பன்னீர்செல்வம் பூங்காவில் தேவை இல்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிலர் “நான் தெரியாமல் வந்துவிட்டேன்” என்று கூறுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமலேயே சிலர் பல்வேறு இடங்களில் சுற்றி திரிவதாகவும், இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் தேவையில்லாமல் சுற்றி திரிவது தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.