அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் உடன் அஜித் கை கோர்த்திருக்கிறார்.
அஜித்தின் 60ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தப் படத்தையும் பே வியூ புரோஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்றிருந்தது.
இதனிடையே, தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டியளித்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் வலிமை படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்றும், படம் அடுத்த ஆண்டு தீபாவளி விருந்தாகத் திரைக்கு வரும் எனவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அஜித், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.