பொற்பனைக் கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக்கோட்டை பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறிய அங்கு அகழ்வாராய்ச்சி பணி நடக்க அனுமதி அளிக்குமாறு கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி நீதிமன்றம் அகழ்வராய்ச்சி பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா தாமு மற்றும் தொல்லியல் ஆய்வுக் கழக இயக்குனரான இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் பேராசிரியர் இனியன் கூறும்போது, பொற்பனைக்கோட்டை பகுதியில் தமிழர்களின் அடையாளமான கருப்பு சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பானைகள், உடைந்த வளையல்கள், செம்பு கலயங்கள் உள்ளிட்டவைகள் மேலோட்டமான ஆராய்ச்சியில் கிடைத்தது எனவும், தற்போது ஜி.பி.ஆர்.எஸ் மின்காந்த கருவி மூலம் அகழ்வாராய்ச்சிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 16 அடுக்கு செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பகுதி இருப்பதாகவும், தமிழகத்திலேயே எங்கும் கிடைக்காத அரிய வகை பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேராசிரியர் இனியன் தெரிவித்துள்ளார்.