சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரசில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அங்கிருந்து அகதிகளாக போலாந்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அகதிகள் பெலாரஸ்-போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு பெலாரஸ் மற்றும் ரஷ்யா முயற்சி செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டை பெலாரஸ் மற்றும் ரஷ்யா முற்றிலும் மறுத்துள்ளது. இந்த நிலையில் பெலாரஸ் எல்லையில் நேற்று சட்டத்திற்குப் புறம்பாக நுழைய முயற்சித்தவர்களை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினர் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எல்லை பாதுகாப்பு படையினர் மீது அகதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான அகதிகள் போலாந்து எல்லைக்குள் நுழைய முயற்சிப்பதால் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா நேட்டோ படைகள் போலாந்து பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.