சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியா உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதிலும் பிரான்சில் இருந்து கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக 28.2 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா பிரான்ஸ்க்கு வழங்கியுள்ளது. இருப்பினும் கால்வாயை கடந்து வருவோரின் எண்ணிக்கையானது குறைந்த பாடில்லை. மேலும் தற்போது 54.2 மில்லியன் பவுண்டுகள் பிரான்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான அடுத்தகட்ட திட்டங்களை பிரீத்தி பட்டேல் முன்னெடுத்துள்ளார்.
அதில் ஒரு கட்டமாக 200 மில்லியன் பவுண்டுகள் செலவில் ரோந்து படகுகளை வாங்கி சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்தல் மற்றும் கடத்தலை தடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனையடுத்து அகதிகளை தடுத்து நிறுத்துவது எவ்வாறு என்று ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை என்று சட்டத்திற்கு புறம்பாக வருபவர்களை தடுத்து நிறுத்துவதே குறிக்கோளாகக் கொண்டு பிரீத்தி பட்டேல் செயல்பட்டு வருகிறார். மேலும் 2020 ஜனவரியில் இருந்து தற்போது வரை சுமார் 14000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு முழுமையும் 8,410 பேர் மட்டுமே பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.