தவணையில் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களை கொண்ட வாகனங்களின் இயக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற பல காரணங்களை கணக்கில் கொண்டு பயனாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அரசும் இதை ஊக்குவிக்கும் விதமாக மானியங்களை வழங்குகிறது.
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது பிராண்ட் மற்றும் விற்பனையை விளம்பரம் செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எளிமையான வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வழி செய்யும் வகையில் ஆக்ஸிஸ் பேங்க் உடன் இணைந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் சில்லறை கடன்களை விரைவாக வழங்க ஆக்சிஸ் வங்கி முடிவெடுத்துள்ளது.
பின்னர் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 750-க்கும் அதிகமான டீலர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் பைக்கை கடன் தவணை திட்டத்தின் கீழ் வாங்க முடியும். இதில் ஏற்கனவே ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெற குறைவான ஆவணங்கள் உடன் விரைவாக கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து உள்ள நிலையில் தற்போது ஆக்சிஸ் பங்க் உடனும் இணைந்திருக்கிறது. மேலும் இது அதிகப்படியான நபர்களை ஈர்க்க உதவும் என தெரிகிறது.