கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அத்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த கடினமான நிலையில் நலநிதி திரட்டும் பொருட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும் இரண்டு நாட்டினரும் கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி சதம் அடித்தாலும் பாபர் அசாம் சதம் அடித்தாலும் நீங்கள் உற்சாகம் அடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைக்கப் பெற்றாலும் இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள் தான்.
இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டு நாடுகளும் தடுப்பு பணிகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம். ரசிகர்கள் இல்லாமல் பூட்டி வைத்துள்ள மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்தும் போது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் தொலைக்காட்சி மூலம் அதிக அளவிலான ரசிகர்களையும் ஈர்க்க முடியும். ஆனால் இந்த சூழலில் போட்டியை நடத்துவது இயலாத ஒன்று.
தற்போதைய நிலையிலிருந்து முன்னேற்றம் ஏற்படும் பொழுது துபாய் போன்ற பொதுவான இடத்தில் வைத்து இந்த தொடரை நடத்த ஏற்பாடுகள் செய்யலாம். இந்தப் போட்டி இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவை துளிர்க்கவும் இரு நாட்டின் உறவு மேம்படவும் வாய்ப்பளிக்கும். இக்கட்டான இந்த தருணத்தில் இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். நல நிதி திரட்டுவதற்கான போட்டி நடத்துவது குறித்து நாங்கள் சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரை அவர்களுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என்பதில் உறுதியுடன் இருக்கிறது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் தான் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன.