அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் காவல்துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள டைன்சூர் நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். மேலும் அந்த ராணுவ தளத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதற்குள் பயங்கரவாதிகளின் தாக்குதல் முயற்சியை இராணுவ வீரர்கள் முறியடித்து காட்டியுள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பயங்கரவாதிகள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக கொண்டு வந்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.