விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பந்து வழுக்கியதால் அலமாரியில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபு-விஜயலட்சுமி. பிரபு சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் அனன்யாஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். அனன்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் . அப்போது பந்தை ஓடிச்சென்று எடுக்க முயன்றபோது பந்தின் மீது மிதித்தாள் . இதில் நிலை தடுமாறி வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் அலமாரி மீது மோதினாள். இதில் அனன்யாஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அனன்யாஸ்ரீயின் பெற்றோர்கள் குழந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனன்யாஸ்ரீ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அனன்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.