தேனி மாவட்டத்தில் தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளிக்கு திடீரென தலைசுற்றிய நிலையில் கீழே இறங்கமுடியாமல் தவித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தேங்காய் பறிக்கும் தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தென்னைமரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதனையடுத்து 50அடி கொண்ட தென்னைமரத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பெருமாளுக்கு தலை சுற்றியுள்ளது. இதனால் அவர் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் தலைசுற்றுவதாக கீழே இருப்பவர்களிடம் கூறிய நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர் மரத்தில் ஏறி அவர் கீழே விழுந்துவிட கூடாது என கயிறு மூலம் மரத்தோடு சேர்ந்து கட்டியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை அலுவலர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஏணி மீது ஏறி கயிறு மூலம் அவரை கீழே இறக்கியுள்ளனர்.