கர்நாடகாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் லாரியில் 370 மது பாட்டில்கள் மற்றும் 48 மது பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காரமடை பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவர் ராஜேந்திரன் மற்றும் கிளீனர் பாபு ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.