மது பாட்டில்களை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூடலூர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர் கர்நாடகாவிலிருந்து 69 மதுபாட்டில்களை கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.