பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது.
ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் அந்த பெண் தனக்கு “மது அருந்தும் பழக்கம் இல்லை” என்று கூறினார். இருப்பினும் தங்களிடம் அவர் உண்மையை மறைப்பதாக மருத்துவர்கள் அந்த பெண் மீது குற்றம் சாட்டினார்கள்.
அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் அவரை மருத்துவமனையில் தங்க வைத்து பரிசோதனை செய்தனர். அப்போது மருத்துவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு சொட்டு மதுபானம் கூட குடிக்காமல் இருந்தும் அந்தப் பெண் தனது சிறுநீரில் ஆல்கஹால் வெளியேற்றினார்.
இதனால் ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் தொடர்ந்து அவரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது உலகிலேயே முதல் முறையாக அவரது உடலில் ஒரு ஆச்சரிய நிகழ்வை கண்டு திகைத்துப் போனார்கள் மருத்துவர்கள்.
அதாவது அந்தப் பெண் எப்போதெல்லாம் சர்க்கரை உணவுகள் உண்ணுகிறாரோ அப்போதெல்லாம் அவர் சிறுநீரகப் பையில் தங்கி இருக்கும் ஒரு வகைப் பூஞ்சைக் காளான் அந்த சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றி விடுகிறது.
இந்த காரணத்தால் அவர் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ஆல்கஹால் வெளியேற்றியுள்ளது. பின்னர் அந்த பூஞ்சை காளான் கொல்ல அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவர் மீது தவறாக குற்றம் சாட்டியுள்ளதற்கு மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.