சரக்கு வேனில் 2700 சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான சுமதி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தசரக்கு வேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 18 சாக்கு மூட்டைகளில் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வேனில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஜெயகாந்தன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு 27௦௦ சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 1 1/2 லட்சம் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் 2700 சாராய பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.