Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்களே செய்து முடிப்போம்… சிங்கப்பெண்களின் துணிச்சலான செயல்… இனிமேல் இப்படித்தான்…!!

மது விற்பனை செய்த வாலிபர்களை கையும் களவுமாக பழங்குடியினப் பெண்கள் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோக்கல் என்ற கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் பழங்குடியின மக்கள் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டது.

அதன் பிறகு அங்கு வசிக்கும் ஆண்கள் மது குடிக்காமல் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில் சிலர் அந்த கிராமத்திற்கு வெளியே கூடுதல் விலைக்கு மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால் மீண்டும் அங்கு வசிக்கும் ஆண்கள் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிகின்றனர். இதனால் மது விற்கும் வாலிபர்களை பிடிக்க அந்த பழங்குடியின பெண்கள் திட்டமிட்டனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மது விற்கும் வாலிபர்களை அந்த பெண்கள் கையும் களவுமாக பிடித்த அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்பிறகு இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறும்போது, உள்ளூர் காவல் நிலையத்திற்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சில்லிங் முறையில் மது விற்ற வாலிபர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்ததாகவும், மறுபடியும் மது விற்பனை செய்யப்பட்டால் அதனை தடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கிராம பெண்களின் இந்த துணிச்சலான செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |