மது பாட்டில்கள் விற்பனை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை காவல்துறையினருக்கு மரக்காணம் அருகே மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் மதுக்கரை பகுதியில் வசிக்கும் ரகுநாத் என்பதும், இருசக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ரகுநாத் ஆன்லைன் மூலம் தகவல் அனுப்பி மது பாட்டில் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் ரகுநாத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 106 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.