மதுக்கடையின் சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாதானம் கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு மதுக் கடையில் உள்ள 67 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் மர்ம நபர்கள் கடைக்கு வெளியில் நின்றவாறு நூதன முறையில் மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் திருடிச் சென்ற மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 11390 இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.