வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப் பட்டுள்ள நிலையில் கரையை கடக்கும் பொழுது 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை தமிழகத்தில் மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.