தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி கொண்டிருப்பதால் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வரை மழை தொடரலாம் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு சற்று அதிகமாகவே இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பரில் நான்கு குறைந்த காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் மூன்று காற்றழுத்தங்களும் உருவாகும் எனவும், ஜனவரி 24ஆம் தேதி வரை மழை தொடரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.