இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குமரி கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.