கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ.சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். இதனால் திருமணம் தகவல் மையத்திலும் பதிவுசெய்தனர். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார். அவர் பேசியதாவது ” தன் பெயர் சூசன் (23). நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். எனது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக நானும் என் தம்பியும் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறோம். நான் இங்கு மருத்துவராக இருக்கிறேன். நீங்கள் திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்து இருந்ததை பார்த்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை திருமணம் செய்துகொள்வீர்களா” என அவர் கேட்டு உள்ளார்.
இதனையடுத்து 2 பேரும் வாட்ஸ்-அப் வாயிலாக புகைப்படங்களை அனுப்பிவைத்து இருக்கின்றனர். பின் 2 பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்ததாக தெரிகிறது. இதனால் நவீனும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்பின் 2 பேரும் தினசரி வாட்ஸ்அப் வாயிலாக பேசி வந்தனர். இந்நிலையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் நவீனிடம் பேசிய சூசன், நானும் எனது தம்பியும் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஊருக்கு வருகிறோம். ஊருக்கு வந்ததும் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதுடன், நெதர்லாந்திலிருந்து டெல்லி வருவதற்கான விமான டிக்கெட்டையும் காண்பித்தார். ஆகவே அவரின் வருகையை எதிர்பார்த்து நவீன் காத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், தான் டெல்லி விமானம் நிலைய சுங்க அதிகாரி மணி சர்மா. நெதர்லாந்து நாட்டிலிருந்து சூசன் என்பவர் இங்கு வந்து உள்ளார். அவர் ரூபாய் 1 லட்சம் யூரோ பணத்தை கொண்டு வந்துள்ளார். அதன் மதிப்பானது ரூ.81 லட்சம் ஆகும். அதற்குரிய வரியை சூசன் செலுத்தவில்லை என்பதால் அவரை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். ஆகையால் அதற்கான வரி ரூபாய் 16 லட்சத்து 24 ஆயிரத்து 400-ஐ செலுத்தவேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் வங்கிகணக்கு எண்ணையும் கொடுத்துள்ளார். அதனை நம்பிய நவீன் அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 400-ஐ செலுத்தினார். அதனை தொடர்ந்து டெல்லியிலிருந்து பேசிய அதிகாரியின் எண்ணை தொடர்பு கொண்டு தான் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டதாக நவீன் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் தான் சூசனை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்பின் சில நிமிடங்கள் கழித்து நவீன், சூசனின் செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டார். ஆனால் அந்த செல்போன் நம்பர் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த நவீன் தன்னிடம் சுங்க அதிகாரி என பேசியவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதுவும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் நவீன் கிருஷ்ணகிரிக்கு சென்று விசாரித்தபோது நெதர்லாந்து நாட்டில் பேசிய சூசன் கூறிய தகவல் அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. ஆகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி காவல்துறையினர் சூசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது போன்று யாரும் பேசி பணம்கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.