வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வருகிறது. இதனிடையில் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள், துறைமுக பகுதி சிறிய ரக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் (அதாவது ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. வகை விசைப்படகு மீனவர்கள்) மறு உத்தரவு வரும் வரையிலும் கடலுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
மேலும் கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உடனே கரைக்கு திரும்பி வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலில் தங்கியிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். இதேபோன்று கடலூர் துறைமுக பகுதி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க போகவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகபகுதி நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.