தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதம் சார்ந்த மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களை பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.