தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது. 12 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்ததாளுமண்டலம் நகரும் நிலையில் இன்று மாலை புயல் உருவாக கூடும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் மழையால் பாதிக்கப்படுபவருக்கு உதவ போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.மேலும் புயல் உருவாக உள்ளதால் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் தயாராகவும் கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.