தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.