தற்போதைய காலக்கட்டத்தில் கடன் வாங்குவதும், இஎம்ஐ கட்டுவதும் சாதாரணமாகி விட்டது. கல்வி, மருத்துவம், தொழில் துவங்குவது, வீடுகட்டுவது ஆகிய விஷயங்களுக்காக கடன் பெறலாம். ஆனால் ஒரு பொருளை வாங்கவேண்டும் என்பதற்காக அதிக வட்டியுள்ள பர்சனல் லோன்களை வாங்குவது மிகவும் ஆபத்தானது ஆகும். பொதுவாக கார், கேஜெட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்ற பாதுகாப்பான கடன்களை விடவும் அதிகமாகும். இவற்றுக்கான வட்டிவிகிதம் 10-24 சதவீதம் வரை இருக்கும். இது வீட்டுக்கடன்களை விடவும் அதிகம் ஆகும்.
பர்சனல்லோன் வாங்குவதை எதற்காக தவிர்க்க வேண்டும்..?
டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர், தொழில் முனைவோர், போட்காஸ்டர், முதலீட்டாளர் என பன்முகதன்மை உடைய ஷாமணி இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் ராஜ்ஷமானி, நிதி சம்பந்தமாக சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம்வரும் இவரை, இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேரும், ட்விட்டரில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேரும், யூ டியூப்பில் 2 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களைக் கொண்டுள்ளார். அத்துடன் வணிகம், பொருளாதாரம் பற்றி பேசிவரும் இவர் கடன் வாங்குவது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
உங்களது வாழ்க்கை முறையினை மேம்படுத்துவதற்கு விலை உயர்ந்த கேஜெட்டுகள்,கார்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வாங்க கடன்பெறுவது என்பது நிதிநெருக்கடியை ஏற்படுத்தும். இதனிடையில் உங்கள் வணிகத்திற்காக (அல்லது) அவசர தேவைகளுக்காக கடன் வாங்குவது, அதிகமான பணம் சம்பாதிக்கவும், மோசமான நிதிநிலையை வெல்லவும் உதவும் என்று கூறுகிறார். தனிப்பட்டகடன் மற்றும் அவற்றில் இருந்து விலகியிருப்பது ஏன் சிறந்தது என்பதுப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை ஷமானி பகிர்ந்துள்ளார். எப்போது கடன் வாங்கவேண்டும் என்பதை விட, எதற்காக கடன் வாங்க வேண்டும் என்பது முக்கியம்.
ஆகவே கடன்களை சொத்து வளர்ச்சிக்கான கடன், பொறுப்பு வளர்ச்சிக்கான கடன் என 2 வகைகளாகப் பிரித்திருக்கிறார். இது தொடர்பாக ஷிமானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியதாவது “ஒவ்வொரு முறையும் நீங்கள் வங்கியில் கடன் வாங்கும்போது, நான் இந்தக் கடனை சொத்தாக உருவாக்குகிறேனா? என யோசியுங்கள். இதன் பொருள் என் வணிகத்திற்கான கடன், புது சொத்தை விரிவுபடுத்துவது (அல்லது) எதிர் காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க இது எனக்கு உதவும். இவற்றிற்காக வாங்கக்கூடிய கடன் உங்களை அதிகம் கவலைப் படவைக்காது” என்று கூறினார். எனினும் ஒரு புதிய கேஜெட் (அல்லது) கார் வாங்குவது ஆகிய விலையுயர்ந்த வாழ்க்கை முறையை பராமரிக்க, உங்களுடைய சுமையை அதிகரிக்ககூடிய பொறுப்பு கடனாகும். இது போன்ற கடன்களிலிருந்து விலகியிருப்பது நல்லது ஆகும். ஏனெனில் தனிநபர்கடன் வாங்குவதில் பல்வேறு ஆபத்துகள் இருக்கின்றன. அதாவது,
# சரியான நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் போவது.
# நீங்கள் பணம் செலுத்துவதைத் தவிர்த்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
# குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் எந்த வங்கியும் (அல்லது) நிதி நிறுவனமும் எதிர்காலத்தில் அவசரகால நிலைகளில் கூட உங்களுக்கு எளிதாக கடன்வாங்க முடியாது.
# அதிகமான கடன் தொகை உங்களது மாத வருமானத்தை உறிஞ்சி, நிதி நிலையை மேலும் மோசமாக்கி விடும்.
# ஆகவே பர்சனல் லோன் வாங்கபோகும் முன் இதையெல்லாம் நன்றாக அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.